ரவுடிகளால் சூறையாடப்பட்ட வி.சத்திரப்பட்டி காவல் நிலையம். (அடுத்த படம்) காவல் நிலையத்துக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து என்.முத்துலிங்கபுரம் பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையிலான அதிமுகவினர். 
க்ரைம்

மதுரை திருமங்கலம் அருகே நள்ளிரவில் காவலரை சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தை பூட்டிய ரவுடிகள்

செய்திப்பிரிவு

மதுரை திருமங்கலம் அடுத்த வி.சத்திரப்பட்டியில் காவல் நிலையத்தை சூறையாடிய ரவுடிகள், இரவுப் பணியில் இருந்த தலைமை காவலரை சரமாரியாக தாக்கினர். அவரை உள்ளே சிறை வைத்து காவல் நிலையத்தை பூட்டிவிட்டு தப்பினர். அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி விசாரிக்க வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை போலீஸார் கைது செய்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு, மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கண்மாய் கரையில் தலை துண்டித்து கொல்லப்பட்ட நிலையில், இளைஞரின் உடல் கிடந்தது. இந்த கொலை வழக்கில், வி.சத்திரப்பட்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் உள்ளிட்ட சிலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட பிரபாகரன் தற்போது ஜாமீனில் உள்ளார்.

இந்த நிலையில், வேறொரு வழக்கு குறித்து விசாரிப்பதற்காக பிரபாகரனின் வீட்டுக்கு திண்டுக்கல் போலீஸார் கடந்த 13-ம் தேதி சென்றனர். அங்கு பிரபாகரன் இல்லாததால், அவரது தந்தை முத்துவேலுவிடம் விசாரித்துவிட்டு சென்றுள்ளனர்.

இதை அறிந்து கோபமடைந்த பிரபாகரன், அன்று நள்ளிரவில் தனது கூட்டாளியுடன் வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். தான் இல்லாத நேரத்தில் தந்தையிடம் போலீஸார் விசாரணை நடத்தியது குறித்து கேட்டு, இரவுப் பணியில் இருந்த தலைமை காவலர் பால்பாண்டியிடம் தகராறு செய்துள்ளார். ரவுடிகள் இருவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் உள்ள மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்தனர். தலைமை காவலர் பால்பாண்டியையும் சரமாரியாக தாக்கிய அவர்கள், காவல் நிலையத்தை வெளியே பூட்டிவிட்டு தப்பினர்.

சக போலீஸாரை செல்போனில் தொடர்பு கொண்டு, நடந்த விவரங்களை பால்பாண்டி தெரிவித்தார். சிறிது நேரத்தில் அங்கு விரைந்து வந்த போலீஸார், பால்பாண்டியை மீட்டனர். தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அரவிந்த், டிஎஸ்பி சந்திரசேகரன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளும் அங்கு வந்து, ரவுடிகளால் சூறையாடப்பட்ட காவல் நிலையத்தை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், காவல் நிலையத்தை பார்வையிடுவதற்காக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சிலர் நேற்று காலை சென்றனர். என்.முத்துலிங்கபுரம் பகுதியில் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து, அங்கு உள்ள மரத்தடியில் அமர்ந்து உதயகுமார் மற்றும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து, உதயகுமார் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். அனைவரும் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, காவல் நிலையத்தை சூறையாடிவிட்டு தலைமறைவான பிரபாகரன் மற்றும் அவரது கூட்டாளியை பிடிக்க உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் கண்டனம்: ‘திமுக ஆட்சியில் மக்களுக்கும், மக்களை காக்க வேண்டிய காவல் துறைக்கும் பாதுகாப்பு இல்லை. அதில் உச்சத்தின் உச்சமாக, காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை. தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நடந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, சட்டம் - ஒழுங்கை பேணிக் காக்க வேண்டிய காவல் நிலையத்திலேயே தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT