சென்னை: போலி ஆவணங்கள் மூலம் வழக்கறிஞர்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அலுவலகத்தில் ஆஜரான 2 போலி வழக்கறிஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நேற்று (ஜூன் 13) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் செயலாளர் கிரிதா செந்தில் குமார் உயர் நீதிமன்றம் காவல் நிலையத்தில் (B-4 ), மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கவிதா மற்றும் சேலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் டெல்லி பார்கவுன்சிலில் 2020-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்ததை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு மாற்றுவதற்கு கடந்த 28.04.2022 ல் இந்திய பார்கவுன்சிலில் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்திய பார்கவுன்சில் மேற்படி நபர்களை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் பதிவு செய்வதற்கு ஆட்சேபனை குறித்து கடிதம் மூலம் கேட்டதின் பேரில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அலுவலர்கள் மேற்படி விண்ணப்பதாரர்கள் புதுடெல்லியில் உள்ள GLOCAL பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு முடித்ததாக சமர்பித்த ஆவணங்களின் உண்மை தன்மையை கண்டறிய கடிதம் மூலம் பெற்ற அறிக்கையின் படி இருவரின் கல்வி சான்றிதழ்கள் போலியானது என தெரியவந்தது.
எனவே பார்வுகவுன்சில் அலுவலகத்துக்கு போலி ஆவணங்களுடன் வந்திருந்த கவிதா, மற்றும் செந்தில்குமார் இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த கவிதா (42) மற்றும் சேலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (57) ஆகியோரை வெள்ளிக்கிழமை பார்கவுன்சில் அலுவலகத்தில் வைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 டெல்லி பார்கவுன்சில் அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (ஜூன் 14) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.