க்ரைம்

கோவை அருகே காரை வழிமறித்து ஒன்றேகால் கிலோ தங்கக்கட்டி கொள்ளை: போலீஸ் விசாரணை

டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை அருகே காரை வழிமறித்து ஒன்றேகால் கிலோ ( 1 கிலோ 250 கிராம்) அளவிலான தங்கக்கட்டிகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை க.க.சாவடி போலீஸார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப். இவர், கேரளாவில் நகைக்கடை வைத்துள்ளார். இவரும், இவரது கடையில் பணியாற்றி வரும் விஷ்ணு என்பவரும் நேற்று (ஜூன் 13) சென்னை சென்றனர். அங்கு 1 கிலோ 250 கிராம் அளவுக்கு தங்கக்கட்டியை வாங்கிக் கொண்டு ரயில் மூலம் புறப்பட்டு இன்று (ஜூன் 14) காலை கோவை வந்தடைனர்.

தொடர்ந்து, கோவையில் இருந்து சொகுசு கார் மூலம் ஜெய்சன் ஜேக்கப், விஷ்ணு ஆகியோர் கோவையில் இருந்து பாலக்காடு சாலை வழியாக பாலக்காடு நோக்கி புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர்.
இன்று காலை சுமார் 8 மணியளவில் இவர்களது கார் க.க.சாவடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, திடீரென ஒரு லாரி சாலையின் குறுக்கே வந்து நிறுத்தப்பட்டு, இவர்களுடைய கார் மறிக்கப்பட்டது.

அப்போது அங்கு பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பல் காரை சுற்றி வளைத்தனர். அதில் சிலர் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே ஏறினர். தொடர்ந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி, ஜெய்சன் ஜேக்கப், விஷ்ணு ஆகியோரிடம் இருந்த ஒன்றேகால் கிலோ நகை, ரூ.60 ஆயிரம் பணத்தை பறித்தனர். சிறிது தூரம் சென்ற பின்னர், இருவரையும் மர்மநபர்கள் காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு, தங்கக்கட்டிகளுடன் தப்பிச் சென்றனர்.

காரில் இருந்து இறக்கிவிடப்பட்ட இருவரும் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளின் உதவியுடன் நடந்த சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இக்கொள்ளைச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT