சென்னை: பாஜக பிரமுகர் மின்ட் ரமேஷ் தொடர்புடைய 9 இடங்களில் போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற மின்ட் ரமேஷ் (54). பாஜக நெசவாளர் பிரிவு முன்னாள் மாநில செயலாளரான இவர் மீது 5 வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இவர் அரசு புறம்போக்கு நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்வது உட்பட பல்வேறு குற்றம் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர், வருவாய் துறையினருடன் நேற்று காலை சென்று மின்ட் ரமேஷிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீடு மற்றும் அவர் தொடர்புடைய அம்பத்தூர், மாதவரம், செங்குன்றம் உள்ளிட்ட சுமார் 9 இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.