கோவில்பட்டி: எட்டயபுரம் அருகேயுள்ள மேலக்கரந்தை பகுதியில் லாரி மீது கார் மோதியதில் தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றப் பணியாளர்கள் இருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், மாவட்ட நீதிபதி உட்பட இருவர் காயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி வருபவர் பூரண ஜெய ஆனந்த் (55). இவர், திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் காரில் வந்தார். அவருடன் தனி பாதுகாவலர் நவீன்குமார், வழக்கறிஞர் எஸ்.தன ஜெயராமச்சந்திரன் (56), நீதிமன்றப் பணியாளர் ஸ்ரீதர் குமார் (37), நீதிமன்ற உதவியாளர் உதயசூரியன், நீதிமன்றப் பதிவுரு எழுத்தர் வாசு ராமநாதன் ஆகியோரும் வந்திருந்தனர்.
இவர்கள் திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று காலை காரில் தஞ்சாவூர் புறப்பட்டனர். காரை வாசு ராமநாதன் ஓட்டினார். காலை 9 மணியளவில் எட்டயபுரம் அருகேயுள்ள மேலக்கரந்தை பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது இவர்களது கார் மோதியது. இதில் கார் நொறுங்கியது. இந்த விபத்தில் ஸ்ரீதர் குமார், வாசு ராமநாதன், காவலர் நவீன்குமார், வழக்கறிஞர் தன ஜெயராமச்சந்திரன் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், நீதிபதி பூரண ஜெயஆனந்த், உதயசூரியன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த நால்வரின் சடலங்களை மீட்ட மாசார்பட்டி போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், லாரி ஓட்டுநர் கடலூர் மாவட்டம் பொம்மரக்குடியைச் சேர்ந்த விஜயராஜ் (27) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.