எட்வர்ட் எபாம் இடுபோர் 
க்ரைம்

இணையதளம் மூலம் ரூ.1.15 கோடி மோசடி: நைஜீரிய இளைஞர் கிருஷ்ணகிரியில் கைது

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: இணையதள மோசடி வழக்கில் பெங்களூரு போலீஸாரால் தேடப்பட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞரை கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு குந்தாரப் பள்ளி அருகே வாகன ரோந்து பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1.30 மணியளவில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் கார் ஒன்று சந்தேகத்திற்கும் வகையில் நின்றுள்ளது. அதனை ஆய்வு செய்ய போலீஸார் நெருங்கி சென்ற போது, காரில் இருந்தவர் வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளார்.

உடனடியாக பின்தொடர்ந்த போலீஸார், சிறிது தூரத்தில் காரை மடக்கி பிடித்துள்ளனர். விசாரணையில், காரை வேகமாக ஓட்டிச் சென்றவர் நைஜீரிய நாட்டை சேர்ந்த எட்வர்ட் எபாம் இடுபோர் (43) என்பதும், அவர் இந்தியாவில் தங்கும் உரிமை பெற்று பெங்களூருவில் ஏஜென்சி ஒன்று நடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், கேரளாவில் உள்ள தன் மனைவி, மகளை பார்ப்பதற்கு செல்வதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து, முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து, அவர் ஓட்டி வந்த காரை போலீஸார் சோதனை செய்ததில், 3 ஐ-போன்கள் உட்பட 5 செல்போன்கள், 1 லேப் டாப், 7 வங்கி கணக்கு புத்தகங்கள், 9 ஏடிஎம் கார்டுகள், 4 வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகள் மற்றும் ரூ.3.93 லட்சம் பணம் மற்றும் இரு 100 யூரோ நோட்டுகளும் இருப்பது தெரியவந்தது.

போலீஸாரின் தொடர் விசாரணையில், இடுபோர், பணம் இரட்டிப்பு, முதலீட்டுக்கு லாபம் எனக்கூறி ரூ.1.15 கோடி அளவிற்கு இணையதள மோசடி வழக்கில் பெங்களூரு போலீஸாரால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்தது.

உடனடியாக இடுபோரை கைது செய்த, போலீஸார், பெங்களூரு போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து, கர்நாடகவில் இருந்து வந்த எஸ்ஐ ஹனமான கவுடா தலைமையிலான 4 போலீஸாரிடம், நைஜரிய இளைஞர் எட்வர்ட் எபாம் இடுபோரை ஒப்படைத்தனர்.

SCROLL FOR NEXT