தருமபுரியில் உயிரிழந்த பாம்புடன் டாஸ்மாக் கடைக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தருமபுரி அடுத்த ராஜாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நடேசன் மகன் சூர்யா (எ) சண்முக சுந்தரம் (27). இவர் நேற்று முன்தினம் இரவு தருமபுரி நகரில் 4 ரோடு அருகிலுள்ள டாஸ்மாக் கடைக்கு உயிரிழந்த சாரைப் பாம்பை தன் கழுத்தில் சுற்றிக்கொண்டு சென்றுள்ளார். மதுக்கடை பணியாளர்களிட ம் பாம்பைக் காட்டி அச்சுறுத்தி தனக்கு விரைவாக மதுபானம் வழங்க வேண்டும் என்று மிரட்டி வாக்குவாதம் செய்துள்ளார். அதேபோல, அங்கிருந்த வாடிக்கையாளர்களையும் பாம்பைக் காட்டி அச்சுறுத்தியுள்ளார்.
மேலும், தனக்காக வாங்கிய மதுபானத்தை பாம்பின் வாயில் ஊற்றி, பாம்புக்கு முத்தம் கொடுத்து கலாட்டா செய்துள்ளார். அதன் பின்னர், 4 ரோடு பகுதியில் சாலையில் சென்றவர்களிடம் பாம்பைக் காட்டி அச்சுறுத்தியதுடன் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளார். இதையறிந்த தருமபுரி நகர காவல் நிலைய போலீஸார் போதையில் இருந்த சூர்யாவிடம் இருந்து பாம்பை பெற்று அப்புறப்படுத்தி விட்டு, காலையில் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், 4 ரோடு அருகில் செயல்படும் மதுபானக் கடையின் மேற்பார்வையாளர் மாணிக்கம் (54) இந்த சம்பவம் குறித்து நேற்று தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சூர்யா மீது போலீஸார் 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணையில், சூர்யா மீது ஏற்கெனவே தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.