முத்ரா திட்டத்தில், கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தொழில்நுட்ப வளர்ச்சி, ஆன்லைன் பணப் பரிமாற்றம் அதிகரிப்பு போன்றவற்றின் காரணமாக, அதைப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி சம்பவங்களும் அதிகரித்துள்ளன. முதலீட்டுத் தொகைக்கு ஏற்ப லாபம், டிஜிட்டல் அரஸ்ட், ஆன்லைன் பகுதி நேர வேலை வாய்ப்பு, பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி இ-செயலி தொடங்கி மோசடி, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அபராதம் விதிப்பது போல் அபராதம் ரசீது அனுப்பி மோசடி என புதிய புதிய யுக்திகளில் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். அதன் அடுத்த கட்டமாக, வங்கியில் வழங்கும் முத்ரா கடன் திட்டத்தில் கடனாக பணம் பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இது குறித்து கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: சைபர் க்ரைம் மோசடி தொடர்பாக தினமும் சராசரியாக 40 புகார்கள் வருகின்றன. தற்போது முத்ரா கடன் திட்டத்தில் கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்வது குறித்த புகார்கள் அதிகம் வருகின்றன. மர்ம நபர்கள் ரேண்டமாக, பொதுமக்களின் எண்களைத் தொடர்பு கொண்டு, முத்ரா கடன் திட்டத்தில் கடன் தொகை சுலபமாக பெற்றுத்தரப்படும், குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும், திருப்பிச் செலுத்த உரிய கால அவகாசம் வழங்கப்படும் என ஆசை வார்த்தைகளை கூறுகின்றனர்.
இதை நம்பும் மக்களிடம் முன்தொகை செலுத்த வேண்டும் எனக் கூறி ரூ.30 ஆயிரம், ரூ.50 ஆயிரம் செலுத்த சொல்கின்றனர். அதை செலுத்திய பின்னரே, கடனுக்கான செயல்முறைகள் தொடங்கப்படும் என தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் தங்களது பணத்தை மர்மநபர்கள் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்திய பின்னர், அவர்களை தொடர்பு கொள்ள முடியாது. அதன் பின்னரே, மோசடி செய்யப்பட்டது பொதுமக்களுக்கு தெரிய வருகிறது.
இது தொடர்பாக சமீபத்திய மாதங்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன. எனவே, இதுபோன்ற மோசடி கும்பலிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சைபர் க்ரைம் குற்றம் தொடர்பாக 1930 என்ற எண்ணிலும், https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். மேலும், சைபர் க்ரைம் மோசடிகள் என்றால் என்ன? எவ்வாறு எச்சரிக்யைாக இருக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.