சென்னை: போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பனை செய்து ரூ.55 லட்சம் மோசடி செய்தவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, அண்ணாநகர் மேற்கு விரிவு, 6-வது தெருவில் வசித்து வருபவர் சுவாமிநாதன் (45). இவர், கொளத்தூர் கண்ணதாசன் நகர் பகுதியில் 1,200 சதுரடி நிலத்தை, சூளைமேட்டை சேர்ந்த பாபு (62) என்பவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.55 லட்சத்துக்கு வாங்கி, மனைவி கவிதா பெயரில் கிரையம் செய்தார்.
இந்த இடத்துக்கு சுவாமிநாதன் பட்டா வாங்க முயன்றபோது, அந்த இடத்துக்கு சர்வே எண் உட்பிரிவு செய்ததில், பிழை ஏற்பட்டதை மறைத்து பாபு, சுவாமிநாதனை ஏமாற்றி கிரையம் செய்து கொடுத்தது தெரிய வந்தது. இதுகுறித்து, சுவாமிநாதன் 2020-ம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், பாபு சம்பந்தப்பட்ட இடத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ரூ.55 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.