சென்னை: பொம்மை வியாபாரியை கடத்தி, வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிர்மல்சிங் (23). சென்னை ஏழுகிணறு பகுதியில் தங்கி, கோவிந்தப்பா தெருவில் உள்ள ஒரு பொம்மை கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 10-ம் தேதி இரவு வேலை முடித்து, ஏழுகிணறு, வைத்தியநாதன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் நிர்மல்சிங்கை கத்தி முனையில் மிரட்டி, அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள ஒரு பழைய கட்டிடத்துக்கு கடத்திச் சென்றனர்.
ரூ.15 ஆயிரம் பறிப்பு: அங்கு வைத்து அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர், அவர் வைத்திருந்த செல்போனிலிருந்து ஜிபே மூலம் ரூ.15 ஆயிரத்தை பறித்தனர். இதையடுத்து, அவரை அங்கேயே கட்டிப்போட்டுவிட்டு தப்பினர். நீண்ட நேரத்துக்கு பிறகு அவரை அப்பகுதி மக்கள் மீட்டனர்.
இதுகுறித்து நிர்மல்சிங் ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர். இதில், பொம்மை வியாபாரியை கடத்தி வழிப்பறியில் ஈடுபட்டது 3 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.