வாணியம்பாடி அருகே சாதி ரீதியாக பேசிய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று திருப்பத்தூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கூடுதல் எஸ்.பி.,க்கள் ரவீந்திரன், கோவிந்தராசு ஆகியோர் தலைமமை வகித்து பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் அடங்கிய 61 மனுக்களை பெற்றுக் கொண்டு, அனைத்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் ஓம் பிரகாசம் தலைமையில் அக்கட்சியினர் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது, "வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றிய அமுதா என்பவர் வேறு ஒருவரிடம் பேசும்போது சாதி ரீதியான வன்மத்துடன் பேசியுள்ளார். மேலும் அரசு பள்ளி வளர்ச்சி, மாணவர்களின் நலனுக்காக அரசு பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளியின் மேலாண்மை குழு மற்றும் பள்ளி வளர்ச்சி குழு செயல்படுகின்றன. இந்த நிர்வாகத்தை கொச்சைப் படுத்தி பேசியிருக்கிறார். எனவே, திட்டமிட்டு பேசிய தலைமை ஆசிரியை மீது சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் அடுத்த தாதவள்ளி பகுதியைச் சேர்ந்த பாரதி ராஜா என்பவர் அளித்த மனுவில், ”எனக்கு ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பழக்கமானார். அவர் மூலம் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் சீட்டு கட்டி வந்தேன். இந்நிலையில் அந்த நிதி நிறுவனத்தினர் ஏமாற்றிவிட்டதாக கடந்த 2024-ம் ஆண்டு அந்த பெண் என்னிடம் கூறினார். இருப்பினும், நான் கட்டிய ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 500-யை தருவதாக அந்த பெண் கூறினார். ஆனால், தற்போது வரை அந்த பணத்தை தரவில்லை. எனவே, அவரிடம் இருந்து எனது பணத்தை பெற்றுத்தர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை பகுதியைச் சேர்ந்த பாபு அளித்த மனுவில், ”நான் விவசாயம் செய்து வருகிறேன். இந்நிலையில் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் என் மீது அடிக்கடி பொய் வழக்குப்பதிவு செய்து எனது வங்கி கணக்கை முடக்கி விட்டனர். தற்போது, பல்வேறு தேவைகளுக்காக எனது வங்கி கணக்கு தேவைப்படுகிறது. எனவே, எனது வங்கி கணக்கை விடுவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.