க்ரைம்

திரு​வள்​ளூர் | காங். பிரமுகர் கொலை: இளைஞர் கைது

செய்திப்பிரிவு

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே மது அருந்துவதை கண்டித்ததால் காங்கிரஸ் பிரமுகர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). நெசவு தொழிலாளியான இவர், காங்கிரஸ் கட்சியின் வார்டு உறுப்பினராக இருந்து வந்தார். ராஜேந்திரனுக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன், நெசவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். நள்ளிரவில் ராஜேந்திரன் வீட்டின் பின்புறம் சென்றபோது, மர்ம நபர் அவரை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியது நேற்று காலை தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை போலீஸார் சம்பவ இடம் விரைந்து, ராஜேந்திரனை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாசபெருமாள், திருத்தணி டி.எஸ்பி கந்தன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து, ஆர்.கே.பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், ராஜேந்திரன் வீட்டுக்கு பின்புறமுள்ள தெருவில் வசிக்கும் ஹரிகிருஷ்ணன் (24) என்ற இளைஞரை கைது செய்தனர்.

மது அருந்தும் பழக்கம் கொண்ட ஹரிகிருஷ்ணன், அடிக்கடி தன் தந்தையிடம் வீண் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையறிந்த ராஜேந்திரன், நேற்று முன் தினம் இரவு தன் வீட்டுக்கு பின்புற பகுதியில் மதுபோதையில் நின்று கொண்டிருந்த ஹரிகிருஷ்ணனை கண்டித்துள்ளார்.

கோபமடைந்த ஹரிகிருஷ்ணன், தரையில் கிடந்த பெரிய கல்லால் ராஜேந்திரனின் தலை மற்றும் உடல் பகுதியில் பலமாக தாக்கி, கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரிய வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு காங்கிரஸ் எம் எல் ஏ கு.செல்வப்பெருந்தகை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT