சென்னை: நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். சென்னை பழவந்தாங்கல் அருகே உள்ள பி.வி.நகர் முத்தையா தெருவைச் சேர்ந்தவர் பவானி (55).
இவர் கடந்த மாதம் தனது வீட்டின் அருகே உள்ள பூங்காவுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர், பவானி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றனர். ஆனால், அவர் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால், பறிக்க முடியவில்லை. உடனே அந்த நபர்கள் அங்கிருந்து தப்பினர்.
இதுகுறித்து பவானி, பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது பம்மல் காமராஜபுரத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் (22), அவரது மனைவி மரிய சுமித்ரா (24) என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார் இருவரையும் நேற்று கைது செய்தனர். இருவருக்கும் வேறு எந்த திருட்டு, வழிப்பறி வழக்கிலாவது தொடர்பு உள்ளதா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.