திருப்பூர்: திருப்பூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் டி.வெங்கிட்டாபுரம் அருகே உள்ள கருப்பணகவுண்டன்புதூரை சேர்ந்தவர் ப.வேலுச்சாமி (70). இவருடைய மனைவி சாமியாத்தாள் (59). இவர்களுடைய மகள் அபிநயா (36), மகன் வித்யாசாகர் (34). திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வேலப்பநாயக்கன்வலசைச் சேர்ந்த தங்கவேல் என்பவருக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அபிநயாவை பெற்றோர் திருமணம் செய்து கொடுத்தனர். மதுரையில் வட்டித் தொழில் செய்து வந்த தங்கவேல், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதையடுத்து, வேலுச்சாமி, சாமியாத்தாள், வித்யாசாகர் ஆகிய மூன்று பேரும் வெள்ளகோவில் வேலப்பநாயக்கன்வலசுக்கு வந்து, அபிநயாவின் வீட்டில் தங்கியிருந்து விவசாயம் பார்த்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வித்யாசாகருக்கும், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். அப்போது குடும்ப பிரச்சினையின் காரணமாக வேலுச்சாமியை குடும்பத்தினர் அவமதிப்பு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக வேலுச்சாமி உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
இன்று (ஜூன் 11) காலை வெள்ளகோவில் வேலப்பநாயக்கன்வலசுக்கு வேலுச்சாமி வந்தார். மனைவி சாமியாத்தாளை கல்லால் தாக்கி, அரிவாளால் வெட்டினார். பின்னர் விஷ மாத்திரையை அவரது வாயில் வலுக்கட்டாயமாக திணித்துள்ளார். சிறிது நேரத்தில் சாமியாத்தாள் உயிரிழந்தார். இதையறிந்த வேலுச்சாமியும் விஷம் குடித்து உயிரிழந்தார். தகவலின்பேரில் இரு சடலங்களையும் வெள்ளகோவில் போலீஸார் மீட்டு விசாரிக்கின்றனர்.