விழுப்புரம்: விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜூன் 11) அதிகாலை திடீரென நிறுத்தப்பட்ட தனியார் சொகுசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் குடும்பத்துடன் பாஜக மாநில செயலாளர் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
பாஜக மாநில செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் அஸ்வத்தாமன். இவரது மனைவி துர்கா (34). இவர்களது மகன்கள் ஆகமன் (10), அச்சுதன் (7). இவர்கள் 4 பேரும், சென்னையில் இருந்து சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டைக்கு நேற்று இரவு காரில் புறப்பட்டனர். காரை, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கிடங்கல் பாண்டலம் கிராமத்தில் வசிக்கும் வெங்கடேசன் (32) என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலத்தில் இன்று (ஜூன் 11) அதிகாலை கார் சென்றது. அப்போது, முன்னால் சென்ற தனியார் சொகுசு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சொகுசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஸ்வத்தாமன் உட்பட 4 பேரும் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த சிறுவன் அச்சுதன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அஸ்வத்தாமன், துர்கா, ஆகமன் ஆகியோர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் காரின் முன் பகுதி சேதமடைந்தது. இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.