க்ரைம்

ஜிம் உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல் - ரவுடி வசூர் ராஜா உட்பட 5 பேர் கைது

செய்திப்பிரிவு

உடற்பயிற்சி கூட உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் ரவுடி வசூர் ராஜா உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரசாக் (42). இவர். அந்த பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரை அடுத்த புதுவசூரைச் சேர்ந்த ரவுடி வசூர் ராஜா கைபேசியில் ரசாக்கை தொடர்பு கொண்டு ரூ.2 லட்சம் பணம் கேட்டுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என ரசாக் கூறியுள்ளார். இருப்பினும், மறுமுனையில் பேசிய வசூர் ராஜா பணத்தை உடனடியாக தயார் செய்யும் படியும், அதனை தனது கூட்டாளிகள் வந்து கேட்கும்போது கொடுக்க வேண்டும். இல்லையெனில், கொலை செய்து விடுவதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

இந்நிலையில், ரவுடி வசூர் ராஜா கூட்டாளிகள் 4 பேர் கொணவட்டத்தில் வைத்து ரசாக்கை வழிமறித்து நேற்று முன்தினம் ரூ.2 லட்சம் கேட்டுள்ளனர். அவர் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து 4 பேரும் உடனடியாக பணத்தை தயார் செய்து தராவிட்டால் உயிருடன் வாழமுடியாது என எச்சரித்து விட்டுச்சென்றனர். இது குறித்து ரசாக், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக வசூர் ராஜா (40), கொணவட்டம் மதினாநகரைச் சேர்ந்த முனீர் (35), சைதாப்பேட்டை ஆசிப் (32), காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (34), காட்பாடி எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த மஞ்சுநாதன் (36) ஆகிய 5 பேரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பாலாற்றின் அருகே நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். கோவை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டிருந்த வசூர் ராஜா கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளதும், இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிட்டத்தக்கது.

SCROLL FOR NEXT