கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மாபுரம் நேருபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரங்கசாமி (45). இவரது மனைவி கவிதா (44). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு வைத்தீஸ்வரி, சாதிகா என்ற மகள்களும், சூர்யா (23) என்ற மகனும் உள்ளனர். ரங்கசாமிக்கு, வேறு ஒரு பெண்ணுடன் தவறான பழக்கம் இருந்தது.
இதை கவிதா கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் ரங்கசாமியின் அலறல் சத்தம் கேட்டு, அவரது மகன் சூர்யா, மகள் சாதிகா ஆகியோர் சென்று பார்த்த போது, அவர் தீயில் எரிந்து கொண்டிருந்தார். அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக சூர்யா, காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், 'தனது அப்பாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான நட்பு இருந்ததால், உறங்கிக் கொண்டிருந்த அவரை கொலை செய்யும் நோக்கதோடு, எனது தாய் கவிதா தீவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான கவிதாவைத் தேடி வருகின்றார்.