ஊத்தங்கரை அருகே கோயில் திருவிழாவின்போது, தனியார் பள்ளி வாகனம் மீது பட்டாசு வீசியதில் 6 மாணவர்கள் காயமடைந்தனர். மேலும், கல் வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளர் காயம் அடைந்தார்.
ஊத்தங்கரை வட்டம் கல்லாவி அருகே ரெட்டிப்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழா நேற்று நடந்தது. அப்போது, சுவாமி ஊர்வலத்தின்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் (40), தென்னரசு (30) ஆகியோர் அவ்வழியாக வந்த தனியார் பள்ளி வாகனம் மீது பட்டாசுகளை வீசினர். இதில் வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்ததில், ஆனந்தூரைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி பிரகதி (11), எல்கேஜி மாணவி தக்சனா (4), யுகேஜி மாணவர் தஸ்வின் (4) உள்ளிட்ட 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆனந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
தகவல் அறிந்த அங்கு வந்த, கல்லாவி காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன், பட்டாசுக்களை வீசிய மோகன் தாஸ், தென்னரசு ஆகிய 2 பேரையும் கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, காயமடைந்த குழந்தைகள் பார்க்க ஆனந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். அப்போது, அங்கு வந்த 10 பேர் காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மதுபோதையில் இருந்த ஏ.ரெட்டிப்பட்டியைச் சேர்ந்த அருண் (27) என்பவர் ஆய்வாளர் ஜாபர் உசேன் மீது கல்லை எடுத்து வீசினார். இதில் ஆய்வாளரின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவருக்கு அங்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டு, தலையில் 3 தையல் போடப்பட்டது. மேலும், இச்சம்பவக்கள் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கல்வீசி தாகியஅருணை கைது செய்தனர்.
சாலை மறியல்: இதனிடையே, அம்மன் கோவில் பதியில் உள்ள டாஸ்மாக கடையால் தான் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகக் கூறியும், கடையை அகற்றக் கோரியும், ஆனந்தூர் பகுதியைச் சேர்ந்த 15 பெண்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டவர்கள் மதுக்கடை முன்பு உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த ஏடிஎஸ்பி நமச்சிவாயம், டிஎஸ்பி-க்கள் சீனிவாசன், முத்து கிருஷ்ணன் மற்றும் போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.