க்ரைம்

சென்னை | மணப்பெண்ணின் நகைகளை திருட முயன்ற உ.பி.யை சேர்ந்த 3 பேர் சிறையில் அடைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: திருமண மண்டபத்தில் மணப்பெண்ணின் நகைகளை திருட முயன்ற, உ.பி.யைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் கடந்த 7-ம் தேதி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள மணமகள் அறையில் மணப் பெண்ணின் நகைகளில் ஒரு பகுதி வைக்கப்பட்டு பூட்டப்பட்டது. இதை நோட்டமிட்ட 3 நபர்களில் ஒருவர், மற்றொரு சாவி போட்டு மணமகள் அறையை திறந்து அங்கு வைக்கப்பட்டிருந்த நகையை திருட முயன்றார்.

இதை, மணப்பெண்ணின் பியூட்டிஷன் வினோதினி (43) என்பவர் கண்டு அதிர்ச்சி அடைந்து, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தப்பி ஓட முயன்ற கொள்ளையர்கள் 3 பேரையும் பிடித்து சரமாரியாக தாக்கி, அவர்களை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பிடிபட்டவர்கள் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சுதிர் குமார் (33), சூரஜ் (28), பத்ரி விஷால் (19) என்பதும், மூவரும் சம்மந்தப்பட்ட திருமண மண்டபத்தில் துப்புரவு வேலை செய்து வருவதும், திருமண மண்டபத்தின் மணமகள் அறையின் மாற்று சாவி போட்டு வைத்து கொண்டு, திருமண வீட்டார் அறையை பூட்டி சென்றதை நோட்டமிட்டு, மாற்று சாவி கொண்டு அறையின் கதவை திறந்து தங்க நகைகள் மற்றும் பொருட்களை திருட முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT