கைதான அத்னான். 
க்ரைம்

சிறுவன் புகைப்பது போன்ற வீடியோ வைரல்: இளைஞர் கைது, ஆயுதப்படை காவலர்கள் சஸ்பெண்ட் 

ந. சரவணன்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே சிறுவன் புகைப்பது போல சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அந்த வீடியோவை வெளியிட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வீடியோ வெளிவர காரணமாக இருந்த ஆயுதப்படை காவலர்கள் 2 பேரை திருப்பத்தூர் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், 102 ரெட்டியூர் கிாரமத்தைச் சேர்ந்தவர் 8 வயது சிறுவன் பொது இடத்தில் புகைப்பது போன்ற வீடியோ காட்சி ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது. இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில், தனிப்படை காவல் துறையினர் சிறுவன் புகைப்பது போல வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்தியதில், 102 ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த அத்னான் (20) என்பவர் தான் இந்த வீடியோவை வெளியிட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் நகர காவல் துறையினருக்கு எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவிட்டார். அதன்பேரில், நகர காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுவன் குறித்த வீடியோவை வெளியிட்ட 102 ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த அத்னானை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

''102 ரெட்டியூரைச் சேர்ந்த அசாருதீன் மற்றும் திருப்பதி ஆகிய 2 பேரும் தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை பிரிவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில், அசாருதீன் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இப்ராஹீம் என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்ராஹீம் மீது ஏதாவது ஒரு வழக்கை பதிவு செய்து அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திட்டமிட்ட ஆயுதப்படை காவலர் அசாருதீன் தனக்கு தெரிந்த அத்னான் உதவியை நாடியுள்ளார். சிறுவன் ஒருவர் கஞ்சா புகைப்பதை போன்ற வீடியோவை எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அந்த வீடியோவை இப்ராஹீம் தான் வெளியிட சொன்னதாக காவல் நிலையத்தில் கேட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என அசாருதீன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இதை தான் செய்ததாக அத்னான் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் தெரிவித்தார்.

இது குறித்த அறிக்கையை திருப்பத்தூர் எஸ்.பி.ஷ்ரேயா குப்தாவுக்கு நகர காவல் துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து, முன் விரோத தகராறில் சிறுவன் ஒருவரை பயன்படுத்தி அவரை தவறான பாதைக்கு அழைத்துச்சென்றது மட்டும் அல்லாமல் அந்த பழியை வேறு ஒருவர் மீது போட திட்டமிட்ட ஆயுதப்படை காவலர் அசாருதீன் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த மற்றொரு ஆயுதப்படை காவலர் திருப்பதி ஆகிய 2 பேரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி.ஷ்ரேயா குப்தா உத்தரவிட்டார்.
மேலும், சிறுவன் புகைப்பது போன்ற வீடியோவை வெளியிட்ட குற்றத்துக்காக இளைஞர் அத்னான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் வாணியம்பாடியில் இன்று சலசலப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT