சிதம்பரம் அருகே ஆந்திராவைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி நரசிம்மா உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். 
க்ரைம்

சிதம்பரம் அருகே ஆந்திராவை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி உள்பட 4 பேர் கைது

க.ரமேஷ்

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகர் போலீஸார் ஆந்திராவை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி நரசிம்மா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள், ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிய ஓடிய 2 பேரையும், தலைமறைவான ஒருவரையும் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் நடமாட்டத்தை குறைக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் சிதம்பரம் காவல் உட்கோட்டம் டிஎஸ்பி லாமேக் அறிவுரையின்படி இன்று (ஜூன்.8) மதியம் சுமார் 3 மணியாளவில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமைமையில் உதவி ஆய்வாளர் பிரகாஷ், காவலர்கள் மணிகண்டன், ராஜீவ் காந்தி, ஞானப்பிரகாசம், ஆனந்த், ரமணி தமிழரசன் ஆகியோர் கொண்ட குழுவினர் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக அண்ணாமலை நகர், ரெட்டை குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் மறைவான இடத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று வியாபாரத்துக்காக காஞ்சாவை பிரித்து பொட்டலம் போட்டுக் கொண்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவலர்கள் அக்கும்பலை சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 4 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் ஆந்திர மாநிலம் வாரங்கல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா மகன் கங்கி நரசிம்மா (40), சிதம்பரம் எம்கே.தோட்டம் பகுதியை சேர்ந்த மணிமேக் மகன் ஆகாஷ்(24), சிதம்பரம் பள்ளிப்பட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மகேஷ் (25), பள்ளிப்பட்டைச் சேர்ந்த பன்னீர் மகன் கிருபா நந்தன்(32) என்பது தெரியவந்தது.

மேலும், தப்பிய ஓடியவர்கள் சிதம்பரந்தன் பேட்டையைச் சேர்ந்த ராகுல், எம்கே.தோட்டம் பகுதியைச் சேர்ந்த மல்லாட்டை என்கிற கோகுல்ராஜ் என்பதும், கஞ்சா வாங்கி விற்பனை செய்ய பண உதவி செய்தவர் சிதம்பரம் எம்கே.தோட்டம் பகுதியைச் சேர்ந்த சேரநீதி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், கங்கி நரசிம்மா, ஆகாஷ், மகேஷ்,கிருபா நந்தன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்த 5 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும், தலைமறைவாக உள்ள சேரநீதியையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT