க்ரைம்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி 10 பேர் காயம்

செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் இருந்து சிறிய சரக்கு லாரி ஒன்று உளுந்தூர்பேட்டை நோக்கி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. மடப்பட்டு மேம்பாலத்தின் வந்தபோது சாலையின் குறுக்கே ஆடு ஒன்று வந்தது.

அந்த ஆடு மீது மோதாமலிருக்க, சிறிய சரக்கு லாரி ஒட்டுநர் வாகனத்தை ஓரமாக திருப்ப முயன்றார். அப்போது சாலையின் நடுவே அமைக்கப் பட்டிருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான சிறிய சரக்கு லாரியின் பின்னால், ஹைதராபத்தில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற சரக்கு லாரியும், அதைத்தொடர்ந்து காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்தனர்.

இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருநாவலூர் போலீஸார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT