சென்னை: தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி நடுரோட்டில் பள்ளி மாணவியை தாக்கிய அதிமுக நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமி அருகே பள்ளி மாணவி ஒருவர் நேற்று முன்தினம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 2 இளைஞர்களில் ஒருவர், மாணவியிடம் கத்தியை காட்டி மிரட்டி தன்னை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, அந்த மாணவியிடம் வாக்குவாதம் செய்த அந்த இளைஞர், நடுரோட்டில் அந்த மாணவியின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதைக்கண்ட பொதுமக்கள் அந்த இளைஞர்களைப் பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த மாணவியை தாக்கிய இளைஞர் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் 118-வது பகுதி செயலாளரான சூர்யா(18) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அவரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீஸார் நேற்று அவரைக் கைது செய்தனர். ஒரு மாதத்துக்கு முன்பு காரில் மது பாட்டில்கள் விற்பனை செய்த வழக்கில் இவரை ராயப்பேட்டை போலீஸார் கைது செய்து சிறை அடைத்தது குறிப்பிடத்தக்கது.