நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை, மாவட்ட நீதிபதி அமர்வுக்கு மாற்றும் மனு ஏற்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் கடந்த 2023-ம் ஆண்டு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்படி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக மேற்கண்ட காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டது.
கடந்த 2023 மார்ச் 29-ம் தேதி அம்பாசமுத்திரத்திலிருந்த அப்போதைய காவல் உதவி கண்காணிப்பாளரான ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், ஆட்சியர் பரிந்துரையின் பேரில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தியிருந்தார். அவர் 80-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு பல்வீர் சிங் மற்றும் அவருடன் பணியாற்றிய 14 காவலர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதற்கிடையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பல்வீர் சிங், 2023-ம் ஆண்டு டிசம்பரில் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். அவர் தமிழ்நாடு சிறப்பு காவலர் 8-வது பட்டாலியனின் உதவி கமாண்டண்டாக பணியாற்றி வருகிறார். அவர் மீதான வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்யா முன்னிலையில் இன்று (ஜூன் 6) விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணைக்காக பல்வீர்சிங் உள்ளிட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸார் ஆஜராகினர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் மனித உரிமை மீறல் இருப்பதால் வழக்கை, மாவட்ட நீதிபதி அமர்வு விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று பாதிக்கபட்ட நபர்களின் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஏற்று கொண்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாடசாமி கூறும்போது, “இந்த விவகாரத்தில் மிகப் பெரிய மனித உரிமை மீறல் நடந்துள்ளது. எனவே இந்த வழக்கை மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இந்த வழக்கில் விசாரணை நியாயமாக நடைபெறும் என்று நம்புகிறோம்” என தெரிவித்தார்.