கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே அரசு பேருந்து மீது மினி லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர்கள் இருவர் உயிரிழந்தனர். 38 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
தருமபுரியில் இருந்து இன்று (ஜூன் 6) பிற்பகல் அரசு பேருந்து ஒன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வழியாக, திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் ருந்தை, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த பரமசிவம் (56) என்பவர் ஓட்டிச் சென்றார். பேருந்தில் நடத்துநர் ஆதிமூலம் உட்பட பயணிகள் 45 பேர் இருந்தனர். இதனிடையே, மத்தூரில் இருந்து போச்சம்பள்ளி நோக்கி எம்.சாண்ட் பாரம் ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை, சிவம்பட்டி கிராமத்தை சேர்ந்த இந்திரகுமார் (32) என்பவர் ஓட்டிச் சென்றார்.
அப்போது மத்தூர் புறவழிச்சாலை அருகே செல்லும் போது, அதிவேகமாக சென்ற மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில், அரசு பேருந்து ஓட்டுநர் பரமசிவம், மினி லாரி ஓட்டுநர் இந்திரகுமார் ஆகியோர் படுகாயங்களுடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பேருந்தின் முன்பக்கம் முற்றிலும் சேதமானதால், 21 பெண்கள், 17 ஆண்கள் உட்பட 38 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் உதவியுடன் மத்தூர் போலீஸார், வருவாய்த் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக, மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சையளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார், சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, மத்தூர் அரசு மருத்துவனையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, உடனடியாக மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக, விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஊத்தங்கரை அதிமுக எம்எல்ஏ தமிழ்செல்வம், வட்டாட்சியர்கள் (ஊத்தங்கரை) மோகன்தாஸ்,(போச்சம்பள்ளி) சத்யா ஆகியோர் ஆறுதல் கூறினர். மேலும், விபத்து காரணமாக மத்தூர் புறவழிச்சாலை சந்திக்கும் தருமபுரி - திருப்பத்தூர் சாலை, கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து விபத்துக்குள்ளான பேருந்து, மினி லாரியை போலீஸார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
விபத்து நடந்த இடத்தில் எஸ்பி தங்கதுரை, டிஎஸ்பி சீனிவாசன், மோட்டார் வாகன ஆய்வாளர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.