உள்படம்: உயிரிழந்த உடுமலை இளம் பெண் காமாட்சி. 
க்ரைம்

பெங்களூரு ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி உடுமலை இளம் பெண் உயிரிழப்பு

எம்.நாகராஜன்

உடுமலை: பெங்களூருவில் ஐபிஎல் சாம்பியன்ஷிப் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உடுமலையைச் சேர்ந்த பள்ளி தாளாளரின் மகள் பரிதாபமாக உயிரிழந்தார்.

உடுமலை விஜி ராவ் நகரை சேர்ந்தவர் எஸ்.மூர்த்தி. இவரது மனைவி எஸ்.ராஜலட்சுமி. இவர் உடுமலை மைவாடி பிரிவில் விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் தாளாளராகவும் உடுமலை தமிழிசை சங்கத்தின் துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது ஒரே மகள் காமாட்சி (27). பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று (ஜூன் 4) ஐபிஎல் சாம்பியன்ஷிப் ஆர்சிபி அணி வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. அதனை காண்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காமாட்சி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெங்களூரு விரைந்தனர். இன்று பகல் 2 மணியளவில் அவரது உடல் உடுமலைக்கு எடுத்து வரப்படுகிறது. மைவாடி பிரிவில் உள்ள பள்ளி வளாகத்தில் இறுதிச்சடங்கு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT