க்ரைம்

சிறப்பு சார்பு ஆய்வாளர் தற்கொலை - கம்பம் போலீஸார் விசாரணை

என்.கணேஷ்ராஜ்

கம்பம்: கம்பம் கோம்பை ரோடு நாக கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (51). இவர் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக இவர் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் உடல்நிலை சீராகவில்லை. இதனால் மன உளைச்சலுடனே காவலர் சரவணன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று (ஜூன் 4) அதிகாலை வீட்டுக்கு வெளியே சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் சரவணனை மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர்.

ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாததால், அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது, சரவணன் அவரது தோட்டத்தில் உள்ள புளியமரம் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கம்பம் வடக்கு போலீஸார் சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT