தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்தக்குடி மாதவநாயர் காலனியை சேர்ந்த கோபுரத்தான் மகன் காளிமுத்து (39). மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு, திரேஸ்புரம் தொம்மையார் கோயில் தெருவை சேர்ந்த கிளாட்சன் மகன் கிசிங்கர் (33), சங்குகுளி காலனியை சேர்ந்த ரெஸ்லின் மகன் லிவிங்ஸ்டன் (24), ஜோக்கின்ஸ் மகன் மரிய ஜெர்மன் (25), வெற்றிவேல்புரம் சங்குகுளி காலனியை சேர்ந்த ரபேக் வேதா (25) மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் திரேஸ்புரம் வலைபின்னும் கூடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள டீக்கடை அருகே சென்ற போது, அங்கு வந்த காளிமுத்து, வலைபின்னும் கூடத்தில் வைத்து மது குடித்ததை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து அங்கு படகுக்கு அண்டை கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கட்டையை எடுத்து காளிமுத்துவை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த காளிமுத்து கீழே விழுந்தார். பின்னர் 5 பேரும் சேர்ந்து காளிமுத்தை கடலுக்குள் தள்ளிவிட்டு அடித்து கொலை செய்தனர்.
இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கிசிங்கர், லிவிங்ஸ்டன், மரிய ஜெர்மன், ரபேக் வேதா மற்றும் 15 வயது சிறுவனை கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு சிறார் நீதிக்குழுமத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மற்ற 4 பேர் மீதான வழக்கு தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பிரீத்தா குற்றம் சாட்டப்பட்ட கிசிங்கர், லிவிங்ஸ்டன், மரிய ஜெர்மன், ரபேக் வேதா ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று (ஜூன் 3) தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் காவல் துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜரானார்.