சென்னை: அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் செல்போனை தர மறுத்த பயணியை கத்தியால் தாக்கிய இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்தவர் ராபிட்சன் (31). இவர் கும்மிடிப்பூண்டி புதுப்பேட்டை பகுதியில் தங்கி, அங்குள்ள நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ராபிட்சனும் அவருடன் பணியாற்றும் முருகன் என்பவரும் கடந்த 1-ம் தேதி அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே திருமூர்த்தி என்ற நண்பரை பார்க்க வந்துள்ளனர்.
பின்னர் கும்மிடிப்பூண்டி புதுப்பேட்டை பகுதியில் உள்ள தங்கும் இடத்துக்கு செல்வதற்காக, அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் 2-வது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இருவர், ராபிட்சனிடம் இருந்து செல்போன் பறிக்க முயன்றுள்ளனர். இதனை தடுத்தபோது, அவரது கன்னத்தில் கத்தியால் காயம் ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராபிட்சன், தாக்குதல் குறித்து கொருக்குபேட்டை ரயில்வே போலீசிலும் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரித்து நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ராபிட்சனை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடிய வியாசர்பாடியைச் சேர்ந்த அஜய் (28), திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டைச் சேர்ந்த விக்னேஷ் (28) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். ராபிட்சன் செல்போன் தர மறுத்ததால், ஆத்திரத்தில் அவரை கத்தியால் தக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரது மீதும் பல்வேறு காவல் நிலையங்களில், வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர் செய்த போலீஸார் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.