சென்னை: பணியாற்றிய நகைக்கடையில் 48 பவுன் நகைகளை திருடிவிட்டு தலைமறைவாக இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை, ஜீனிஸ் சாலையில் அபய்சுந்தர் (35) என்பவர் தங்க நகைக் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வேலை செய்த ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியைச் சேர்ந்த ரோகித் (24) என்பவர், கடந்த மாதம் 7-ம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 13-ம் தேதி இரவு கடை ஊழியர் ரோகித்தை வெகு நேரமாக காணவில்லை. இதையடுத்து, அபய்சுந்தர் போனில் தொடர்பு கொண்டபோது, ரோகித்தின் போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது.
உடனே அபய்சுந்தர் சந்தேகத்தின் பேரில் கடையில் நகைகளை சரிபார்த்தபோது சுமார் 385 கிராம் (48 பவுன்) எடையுள்ள தங்க நகைகள் மாயமாகி இருந்தன. இந்த நகைகளை ரோகித் திருடிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இது தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் அபய்சுந்தர் புகார் தெரிவித்தார்.
போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரோகித் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 42.5 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளிகளை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.