சென்னை: விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறி வைத்து திருடியதாக திருவண்ணாமலை கொள்ளையன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அரும்பாக்கம், ஜெய் நகர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (55). தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக பணி செய்து வருகிறார். இவர் கடந்த 25ம் தேதி இரவு தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு, மறுநாள் காலை பார்த்த போது அது திருடப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையிலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதில், வெங்கடேசனின் இருசக்கர வாகனத்தை திருடியது திருவண்ணாமலை மாவட்டம், ஜமீன் கூடலூரைச் சேர்ந்த ஆல்பர்ட் ரோசாரியோ (20) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸார் இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து புகார் தெரிவித்த வெங்கடேசனின் இருசக்கர வாகனம் உள்பட விலையுயர்ந்த 3 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆல்பர்ட் ரோசாரியோ சொந்த ஊரான திருவண்ணாமலையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். சரியான வேலை கிடைக்காத நேரத்தில் அங்கிருந்து சென்னைக்கு பேருந்தில் வந்து வடபழனி, ஆவடி, அரும்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறி வைத்து திருடி உள்ளார்.
திருடிய பின்னர், அந்த வாகனங்களிலேயே திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். பின்னர், அந்த வாகனங்களை கிடைக்கும் தொகைக்கு விற்பனை செய்து உல்லாசமாக செலவு செய்துள்ளார். இவர் மீது ஏற்கெனவே 5 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது என போலீஸார் தெரிவித்தனர்.