பொள்ளாச்சி: மனநலம் குன்றிய இளைஞர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் உடமைகளை கையாடல் செய்த மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் பணம் பெற்ற மேட்டுப்பாளையம் உதவி ஆய்வாளர் மகாராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த மனநல காப்பகத்தில் 22 வயது இளைஞர் வருண் காந்த் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளான கவிதா அவரது கணவர் லட்சுமணன் இரண்டு மகள்களான ஸ்ரேயா, சுருதி மற்றும் மற்றொரு பங்குதாரரான சாஜி ஆகிய ஐந்து பேர் தலைமறைவாகினர்.
இவர்களை தனிப்படை போலீஸார் தேடி வந்த நிலையில், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட தனிப்படை போலீஸார் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வைத்து ஐந்து பேரையும் கைது செய்தனர்.
கைது செய்தவுடன் அவர்கள் அணிந்திருந்த 17.5 பவுன் நகை மற்றும் ரூ.1.52 லட்சம் பணத்தை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளார். குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படுகின்ற நகை, பணம் போன்ற பொருட்களை மேல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது நடைமுறை, அப்படிச் செய்யாமல் இது குறித்து எந்த தகவலையும் சொல்லாமல் மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் கையாடல் செய்துள்ளார்.
குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படுகின்ற பொருட்கள் அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பின்னர் வழக்கு முடிந்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் குற்றவாளிகளின் உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை நடத்தினார். நவநீத கிருஷ்ணன் மீது கையாடல் செய்ததாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை குழுவில் சென்ற மேட்டுப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜா, நவநீத கிருஷ்ணனிடமிருந்து ரூ.50,000 பெற்றதாகவும் தற்போது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு கோவை மாவட்ட காவல் துறை உதவி ஆய்வாளர் மகாராஜாவை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்.ஐ. மகாராஜா 2016 பேட்ச்ஐ சேர்ந்தவர், கைது செய்யப்பட்ட எஸ்ஐ நவநீத கிருஷ்ணன் 2021 பேட்ச்-ஐ சேர்ந்தவர்.