கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகையை கையாடல் செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த தனியார் மனநலக் காப்பகத்தில் இருந்த வருண்காந்த் (22) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸார் விசாரணை நடத்தி, வழக்கில் தொடர்புடைய 6 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த காப்பக உரிமையாளர் கவிதா, அவரது கணவர் லட்சுமணன் உள்ளிட்ட 5 பேர் கேரள மாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் திருவனந்தபுரத்தில் பதுங்கியிருந்த கவிதா உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து, பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் நகை, பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங்குக்கு தகவல் கிடைத்தது. அவர் நடத்திய விசாரணையில், கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் 17.5 பவுன் நகை மற்றும் ரூ.1.52 லட்சத்தை மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.