காரைக்குடி: காரைக்குடி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.2.06 லட்சம் வழிப்பறி செய்த இருவரை 2 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் இந்திராநகரைச் சேர்ந்தவர் பாக்கியம் (55). இவர் நேற்று (மே 30) காலை அப்பகுதியில் உள்ள தேசிய வங்கியில் ரூ.2.06 லட்சம் எடுத்தார். தொடர்ந்து அருகேயுள்ள உறவினர் வீட்டுக்கு சென்று பேசி கொண்டிருந்தார்.மாலை அங்கிருந்து அவரது வீட்டுக்கு பாக்கியம் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 2 பேர், பாக்கியத்திடம் இருந்து பணப்பையை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அவர் கல்லல் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, வழிப்பறி செய்தது கல்லல் கோழி பண்ணை தெருவைச் சேர்ந்த சுபஸ்ரீ (22), கல்லல் பொங்கத்தலையைச் சேர்ந்த கஜேந்திரன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரவர் வீட்டில் இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர். இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த போலீஸாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் பாராட்டினார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “பாக்கியம் வங்கியில் பணம் எடுக்கும்போதே, இருவரும் கவனித்துள்ளனர். அதன்பின்னர் அவர் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, வெளியே வரும் வரை அங்கேயே காத்திருந்து உள்ளனர். உள்ளூர் என்பதால் தங்களை அடையாளம் காணாமல் இருக்க முகமூடி அணிந்துள்ளனர். வழிப்பறி செய்த பணத்தை இருவரும் பிரித்து கொண்டு, அவரவர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் உதவியால் சிக்கி கொண்டனர்,” என்றனர்.