ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 175 கிலோ ஏலக்காயை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு படகில் கடத்தல் பொருட்கள் செல்ல இருப்பதாக ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், வெள்ளிக்கிழமை அதிகாலை தங்கச்சிமடம் அடுத்த அய்யன்தோப்பு கடற்கரை கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது சுரேஷ் என்பவரது வீட்டில் இலங்கைக்கு படகில் கடத்திச் செல்லவதற்காக 7 மூட்டைகளில் 175 கிலோ ஏலக்காய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஏலக்காய் மூட்டைகளை பறிமுதல் செய்து தங்கச்சிமடம் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவான வீட்டின் உரிமையாளர் சுரேஷையும் போலீஸார் தேடி வருகின்றனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ஏலக்காய் மூட்டைகள் ராமேசுவரம் சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஏலக்காய் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.