க்ரைம்

குலசேகரபட்டினத்தின் பெண் அடித்துக் கொலை: கணவர் தலைமறைவு

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: குலசேகரபட்டினத்தில் பெண் ஒருவர் கருங்கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது இரண்டாவது கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி வெங்கடேசன் (48). இவரது மனைவி பூபதி (46). இவர்கள் இருவரும் குலசேகரபட்டினம் மாணவர் விடுதி அருகே குடியிருந்து கட்டிட வேலை செய்து வந்தனர். பூபதிக்கு வெங்கடேசன் இரண்டாவது கணவர் ஆவார். வெங்கடேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.

அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வெங்கடேசன் தகராறு செய்துள்ளார். அதுபோல நேற்று இரவும் மது அருந்திவிட்டு வந்த வெங்கடேசன், தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும், ஆத்திரத்தில் கருங்கல்லால் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை அந்த வழியாக வந்தவர்கள் சாலையோரம் பூபதி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு குலசேகரபட்டினம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான வெங்கடேசனை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT