சென்னை: கேரளாவைச் சேர்ந்தவர் உள்பட 19 பேருக்கு மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.65 கோடி பெற்று மோசடி செய்ததாக தனியார் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவைச் சேர்ந்தவர் பகவதியப்பன். சென்னை அரும்பாக்கத்தில் தங்கி உள்ளார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்தாண்டு அக்டோபரில் புகார் ஒன்று அளித்தார். அதில், “அரும்பாக்கத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் கோயம்பேட்டைச் சேர்ந்த ஹரிகர குமார் (52) என்பவரது அறிமுகம் கிடைத்தது.
அவர், தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாகவும், அதன் மூலம் பல பேருக்கு மத்திய அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறினார். அதேபோல், எனது மகனுக்கும் மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்தார். இதேபோல், வேறு யாருக்கேனும் பணி வேண்டும் என்றால் அவர்களையும் அழைத்து வாருங்கள். மத்திய அரசு பணி வாங்கி கொடுத்து விடலாம் என்றார்.
இதை உண்மை என நம்பி நான் உள்பட மொத்தம் 19 பேர் ரூ.1 கோடியே 65 லட்சத்து 70 ஆயிரம் கொடுத்தோம். இதையடுத்து, அவர் பணி நியமன ஆணைகளை பெற்றுத் தந்தார். அதை கொண்டு சம்பந்தப்பட்ட பணிக்கு சென்றபோதுதான் அது போலி பணி நியமன ஆணை என தெரியவந்தது. இதையடுத்து, அவரை தொடர்பு கொண்டபோது அவர் போன் அழைப்பை ஏற்கவில்லை. மேலும், தலைமறைவானார்.
எனவே, 19 பேரிடம் பணம் பெற்று, மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த ஹரிகர குமார் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சகுந்தலா தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
இதில், மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஹரிகர குமாரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை நிதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.