க்ரைம்

பொள்ளாச்சி இளைஞர் கொலை: தலைமறைவாக இருந்த காப்பக நிர்வாகிகள் 5 பேர் கைது

செய்திப்பிரிவு

பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த காப்பக நிர்வாகிகள் 5 பேரை தனிப்படை போலீஸார் திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சோமனூர் கரவளி மாதப்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகன் வருண் காந்த் (22) என்பவரை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில், யுத்ரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில் நடத்தப்படும் காப்பகத்தில் சேர்த்தார். கடந்த 15ம் தேதி காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர்களை ஆழியாருக்கு சுற்றுலா அழைத்துச் சென்ற போது, அங்கு வருண் காந்த் காணாமல் போனதாக அவரது தந்தைக்கு காப்பக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ரவிக்குமார் அளித்த புகாரின் பேரில் ஆழியாறு போலீஸார் நடத்திய விசாரணையில், காப்பக நிர்வாகிகள் வருண் காந்த்தை அடித்து சித்ரவதை செய்த போது, வருண் காந்த் உயிரிழந்ததும், உடலை நடுப்புணி அருகே பி.நாகூரில், மனநல காப்பக உரிமையாளர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் புதைத்ததும் தெரியவந்தது. காப்பக உரிமையாளர்களான கவிதா, லட்சுமணன், ஷாஜி, கிரி ராம் ஆகியோர் தலைமறைவாகினர்.

இதையடுத்து, மகாலிங்கபுரம் போலீஸார் அடித்து துன்புறுத்துதல், கொலை, தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான காப்பக நிர்வாகிகளை தேடி வந்தனர்.

இதனிடையே, காப்பக உரிமையாளர்களில் ஒருவரான கிரி ராம் (36) முதலில் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில், தோட்டத்தில் புதைக்கப்பட்ட வருண் காந்த் சடலம் அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, காப்பக பணியாளர் ரங்க நாயகி (32), பாது காவலர் ரித்தீஸ் (26), ஷாஜியின் தந்தை செந்தில் பாபு (54), சதீஸ் (25), ஷீலா (31) ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். காப்பக உரிமையாளர் கவிதா உள்ளிட்ட 5 பேர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் தடுக்க மாவட்ட காவல் துறை விமான நிலையம், துறை முகங்களுக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் வழங்கியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருந்த கவிதா (53), லட்சுமணன் (54), சுருதி (23), ஸ்ரேயா (20), ஷாஜி (27) ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் பொள்ளாச்சி ஜே.எம். 2-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT