சென்னை: குற்ற வழக்கில் சிக்கியவரை ஜாமீனில் விடுவிக்க போலி ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்றது. இதில், வடிவேல் என்பவருக்கு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 21-ம் தேதி சம்பந்தப்பட்ட வடிவேலை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.
ஜாமீன் பெற இரண்டு பேர் கையெழுத்திட்டு, அவர்களின் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, கொருக்குப்பேட்டை, காரனேஷன் நகரைச் சேர்ந்த மோகன் (60), தண்டையார்பேட்டை அஜிஸ் நகர், 2வது தெருவைச் சேர்ந்த முகமது ரபீ (50) ஆகியோர் அவர்களது ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இதை நீதிமன்ற ஊழியர்கள் சரிபார்த்தபோது மோகன் மற்றும் முகமது ரபீ ஆகியோர் சமர்ப்பித்த தலா ஒரு ஆதார் கார்டு மற்றும் ஒரு ரேஷன் கார்டுகள் போலி என தெரியவந்தது. இதையடுத்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் எழும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து மோகன் மற்றும் முகமது ரபீயை நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.