க்ரைம்

தண்டையார்பேட்டையில் துப்பாக்கியால் சுட்டு தொழில் அதிபர் மகன் தற்கொலை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தொழில் அதிபர் மகன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். தொழிலதிபரான இவர், அங்கு ஐஸ் கட்டி, ஐஸ் கிரீம், குல்பி ஐஸ், குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி தாரகை, மகன் பிரகலாதன் நரசிம்மன் (31), மகள் சாதனா உள்ளனர்.

நரசிம்மன், இளநிலை சட்டப் படிப்பு படித்துவிட்டு தனது தந்தையுடன் தொழிலை கவனித்து வந்தார். சாதனா திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மகளைப் பார்க்க சந்திரசேகரனும், தாரகையும் சில தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்றுவிட்டனர். நரசிம்மன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்நிலையில் சந்திரசேகரன் வீட்டில் வேலை செய்யும் அதே பகுதியைச் சேர்ந்த பானு என்ற பெண் நேற்று சென்றார். அப்போது படுக்கை அறையில் நரசிம்மன் துப்பாக்கியால் சுட்டு இறந்துகிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் இது தொடர்பாக போலீஸாருக்கும், சந்திரசேகரனுக்கும் தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்த காசிமேடு போலீஸார் சம்பவ இடம் விரைந்து நரசிம்மன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் நரசிம்மன் சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததும், இதன் விளைவாக தனது தாய் தாரகை தற்பாதுகாப்புக்காக உரிமம் பெற்று வைத்திருந்த கைத்துப்பாக்கியை தனது நெஞ்சில் வைத்து சுட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

மேலும் சந்திரசேகரன் வீட்டில் போலீஸார் சோதனை செய்தனர். இச்சோதனையில் அங்கிருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில் நரசிம்மன், தனது இறப்புக்கு யாரும் காரணமில்லை; நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாகவும் விசாரணை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT