கோப்புப்படம் 
க்ரைம்

சென்னை | ரயிலில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திராவுக்கு ரயிலில் கடத்த முயன்ற 2,000 கிலோ ரேஷன் அரிசியை ஆர்பிஎஃப் போலீஸார் பறிமுதல் செய்து, கடத்த முயன்ற நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் உதவி துணை ஆய்வார் ஜோசப் அமலதாஸ், தலைமை காவலர்கள் ஜி.கண்ணன், வி.குமரவேல், என்.ராஜேஷ் ஆகியோர் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ரயில் நிலையத்தில் ஓரமாக ஏராளமான மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. அதைக் கண்ட ஆர்பிஎஃப் போலீஸார் மூட்டைகளின் அருகே சென்றனர். அதைப் பார்த்த சிலர் அங்கிருந்து தப்பி ஓடினர்.

போலீஸார் அந்த மூட்டைகளை ஆய்வு செய்தபோது 40 மூட்டைகளிலும் ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை ஆர்பிஎஃப் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். மூட்டை 50 கிலோ வீதம் மொத்தம் 2,000 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை ரயிலில் ஆந்திராவுக்கு கடத்திச் சென்று, பாலிஷ் செய்து, மீண்டும் சென்னையில் விற்க திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ரேஷன் அரிசியை ஆர்பிஎஃப் போலீஸார் கைப்பற்றி, கடத்த முயன்ற நபர்கள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT