பைக் ரேஸில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் போட்டிக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
க்ரைம்

சென்னை | பொது​மக்​களுக்கு இடையூறு ஏற்​படும் வகை​யில் பைக் ரேஸில் ஈடுபட்ட 10 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: பைக் ரேஸில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் போட்டிக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் பைக் மற்றும் கார் ரேஸில் ஈடுபடுபவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை அண்ணா நகர் புளுஸ்டார் பகுதியிலிருந்து அண்ணா நகர் ரவுண்டான வரை நேற்று முன்தினம் இரவு இளைஞர்கள் சிலர் அடுத்தடுத்து பைக் ரேஸில் ஈடுபட்டனர். போலீஸார் தடுக்க முயன்றும் அவர்களை மீறி பைக் ரேஸ் நடைபெற்றது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலானது.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டது. இதையடுத்து, பைக் ரேஸில் ஈடுபட்ட 10 இளைஞர்கள் மற்றும் மாணவர்களை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாகவும் உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலியுடனும், வாகனத்தை அதிவேகமாக ஓட்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT