திருவிழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
க்ரைம்

திண்டுக்கல் அருகே பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த 2 பேர் கைது

செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகேயுள்ள வீரக்கல்லில் கோயில் திருவிழாவுக்கு வந்திருந்த பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த 17 வயது சிறுவன் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் அடுத்த செம்பட்டி அருகேயுள்ள வீரக்கல் வெள்ளைமாலை வீருமாறம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று காலை திருவிழாவுக்கு வந்திருந்த பெண் ஒருவர் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, ஜன்னல் வழியாக இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுத்ததைப் பார்த்து கூச்சலிட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் அந்த இளைஞர்களை பிடித்து செம்பட்டி போலீஸில் ஒப்படைத்தனர்.

ஆனால், அவர்களை போலீஸார் தப்பிக்க விட்டுவிட்டதாகக் கூறி, செம்பட்டி சாலையில் திருவிழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து வந்த டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பக்தர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர்களை போலீஸார் தேடினர். அப்போது, அவர்கள் காட்டுப் பகுதியில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, போலீஸார் அங்கு சென்று இருவரை கைது செய்தனர். விசாரணையில், திண்டுக்கல் வண்ணம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நவீன் (20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும், சம்பவத்தின்போது உடனிருந்த அவர்களது நண்பர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT