க்ரைம்

தூத்துக்குடி பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது

செய்திப்பிரிவு

தூத்​துக்​குடி: ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் பெறலாம் என டெலிகிராமில் லிங்க் அனுப்பி தூத்துக்குடி பெண்ணிடம் ரூ.5,90,830 மோசடி செய்த கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு டெலிகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு என செய்தி வந்துள்ளது. அதனை நம்பி அப்பெண் அந்த மர்ம நபர்களை தொடர்பு கொண்டபோது, அவர்கள் ஹோட்டல் மற்றும் உணவகங்களுக்கு ரேட்டிங்ஸ் மற்றும் ரிவியூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று லிங்க் அனுப்பியுள்ளனர்.

அந்த லிங்க் மூலம் தூத்துக்குடி பெண் ரேட்டிங்ஸ் கொடுத்து முதலில் ரூ.3,670 பணம் பெற்றுள்ளார். பின்னர் ஆன்லைன் டிரேடிங் மூலமும் அதிக லாபம் பெறலாம் என அப்பெண்ணிடம், அந்த நபர்கள் ஆசை வார்த்தை கூறி மற்றொரு லிங்க் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து அப்பெண் லிங்க்-ஐ கிளிக் செய்து, அதில் வந்த இணையதள பக்கத்தில் மொத்தம் ரூ.5,90,830 முதலீடு செய்துள்ளார். ஆனால், லாபம் வரவில்லை. தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அப்பெண், தேசிய சைபர் குற்றப்பதிவு இணையதளத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், கன்னியாகுமரி மாவட்டம் திருப்பறப்பு பள்ளிமுக்கு பகுதியைச் சேர்ந்த மகேஷ் (37) என்பவர் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மகேஷை, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதில் தொடர்புடைய பிறர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT