அபிநயா 
க்ரைம்

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த ஆயதப்படை பெண் காவலர் நேற்று துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியைச் சேர்ந்த நாகையன் மகள் அபிநயா(29). நாகை மாவட்ட ஆயுதப்படைக் காவலரான இவர் நேற்று முன்தினம் இரவு நாகை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூல அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், அபிநயா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பகுதியில் இருந்து நேற்று காலை துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சக போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, அபிநயா குண்டு பாய்ந்து உயிரிழந்து கிடந்துள்ளார்.

தகவலறிந்த மாவட்ட எஸ்.பி. அருண் கபிலன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். இதில், அபிநயா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டதில், குண்டு பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இது தொடர்பாக நாகூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரித்து வருகின்றனர்.

மருத்துவ விடுப்பில் சென்றிருந்த அபிநயா 5 நாட்களுக்கு முன்பு பணிக்கு திரும்பிய நிலையில், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT