சென்னை: ஏ.ஐ தொழில்நுட்ப செயலி மூலம், ஆபாச வீடியோவில் முகத்தை மாற்றி மணிப்பூர் இளம் பெண்ணை மிரட்டிய பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
மணிப்பூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்தார். அதில், ‘கடந்த ஆண்டு முதல் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் பணி செய்து வருகிறேன். அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள வீட்டுக்கு செல்ல பைக் டாக்ஸியை தினமும் பயன்படுத்தி வந்தேன். அந்த டாக்ஸியை வியாசர்பாடி, சாலைமா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த ஜோ ரிச்சர்ட் (28) என்பவர் ஓட்டி வந்தார்.
பல அழைப்புகளுக்கு அவரே வந்ததால் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. இந்நிலையில், அவர் என்னுடன் தனிமையில் இருக்க விரும்பினார். நான் இடம் கொடுக்காததால் ஏ.ஐ தொழில்நுட்ப செயலி மூலம் எனது முகத்தையும், அவரது முகத்தையும் ஒன்றிணைத்து நாங்கள் இருவரும் தனிமையில் இருப்பதுபோல் போலியான ஆபாச வீடியோவை தயார் செய்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து, போலி ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும்’ என புகாரில் தெரிவித்து இருந்தார்.
இது குறித்து, சென்னை மேற்குமண்டல சைபர் க்ரைம் போலீஸார் விசாரிக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜோ ரிச்சர்ட் மற்றும் புகார் அளித்த இளம்பெண் 8 மாதங்களாக நண்பர்களாக பழகி பல இடங்களுக்கு சுற்றி திரிந்துள்ளனர்.
ஜோ ரிச்சர்ட், தனிமையில் இருக்க விரும்பிய விருப்பத்தை இளம்பெண் நிராகரித்ததால், அப்பெண்ணின் புகைப்படங்களை ஏஐ தொழில்நுட்ப செயலி மூலம் ஆபாச போலி வீடியோக்களை தயார் செய்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மிரட்டி, அப்பெண்ணிடம் ஆசையை நிறைவேற்றலாம் என திட்டமிட்டு ஜோ ரிச்சர்ட் செயல்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜோ ரிச்சர்ட்டை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து சிறையிலிடைத்தனர். முன்னதாக அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ஒரு செல்போன் மற்றும் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.