க்ரைம்

டிஜிபி சுற்றறிக்கையை பின்பற்றாத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கி.மகாராஜன்

மதுரை: நிலுவை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பான டிஜிபியின் சுற்றறிக்கையை பின்பற்றாத போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் எம்.சத்திரப்பட்டியை சேர்ந்த அசோக், தன்ராஜ், சதீஷ்குமார், சுரேஷ், நவநீதன், பாலாஜி, பெரியசாமி, சரவணன் ஆகியோர் மீது போலீஸாரை தாக்கியதாக எம்.சத்திரப்பட்டி போலீஸார் 2012ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 8 பேரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது மனுதாரர்கள் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கோப்புக்கு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவ்வழக்கு முடித்துவைக்கப்பட்டது. பின்னர் குற்றப்பத்திரிகை நகல் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி 8 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இ.பைலிங் முறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தவறுதலாக குற்றப் பத்திரிக்கை எண்ணுக்கு பதிலாக பிஆர்சி எண் குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: "போலீஸாரையும், போலீஸ் வாகனத்தையும் தாக்கியதாக மனுதாரர்கள் மீது 2012ல் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த வழக்கில் 2024ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவறு காரணமாக குற்றப்பத்திரிகை உடனடியாக கோப்புக்கு எடுக்கப்படவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு உத்தரவுகளை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ளது.

இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுபடி பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக டிஜிபி 2025ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதியில் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். அதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது மட்டும் விசாரணை அமைப்பின் பங்கு நின்றுவிடாது.

வழக்கு விசாரணை திறம்பட நடைபெறுவதையும் உறுதி செய்ய வேண்டும். மாநகர் காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப் பாளர்கள் குற்றப் பத்திரிகைகள் கோப்புக்கு எடுக்கப்படாத வழக்குகளின் மாதாந்திர ஆய்வு கூட்டத்தின் போது மறு ஆய்வு செய்ய வேண்டும். மண்டல ஐஜிக்கள், மாநகர் காவல் ஆணையர்கள், டிஐஜிக்கள் சிறப்பு கவனம் செலுத்தி கோப்புக்கு எடுக்கப்படாத வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், இந்த வழக்குகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் இ-பைலிங் முறையில் படிப்படியாக குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்து கோப்புக்கு எடுக்கப்படாத வழக்குகள் இல்லாத நிலை ஏற்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை பின்பற்றாதவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

டிஜிபிக்கு பாராட்டு: நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுத்த டிஜிபியை நீதிமன்றம் பாராட்டுகிறது. சுற்றறிக்கையை வெளியிடுவது மட்டும் நோக்கத்தை நிறைவேற்றாது. அதை அதிகாரிகள் உணர்வுடன் செயல்படுத்த வேண்டும். உயரதிகாரிகளின் சுற்றறிக்கைகள், வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்களை பின்பற்றத் தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது தனியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT