சென்னை: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த சர்க்கார் விரைவு ரயிலில் ரூ.32.44 லட்சம் ஹவாலா பணத்தை எடுத்து வந்த 3 பேரிடம் ஆர்பிஎஃப் போலீஸார் மற்றும் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவல் ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையில் ஆர்பிஎஃப் போலீஸார் இன்று (வியாழக்கிழமை) காலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 9-வது நடைமேடையில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக புதுச்சேரியை அடையும் சர்க்கார் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் இறங்கி வந்த பயணிகளை கண்காணித்தபோது, 3 பேர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்களை எழும்பூர் ஆர்.பி.எஃப் அலுவலத்துக்கு அழைத்து வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் பெரம்பூர் பேரக்ஸ் பட்டாளத்தைச் சேர்ந்த அசோக் ஜெயின் (51), ஷாகில் அசோக் ஜெயின் (21), சவுகார்பேட்டையைச் சேர்ந்த சங்கீதா ஆகியோர் என்பதும், ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த சர்க்கார் விரைவு ரயிலில் ரூ.32.44 லட்சம் பணத்தை எடுத்து வந்ததும், இந்த பணத்துக்கான எந்தவித ஆவணங்களும் அவர்களிம் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் ஆர்.பி.எஃப் அலுவலத்துக்கு சென்ற வருமானவரித் துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் மூவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், கடந்த 18-ம் தேதி ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை வழியாக செங்கல்பட்டு செல்லும் சர்க்கார் விரைவு ரயிலில் ரூ.38 லட்சம் ஹவாலா பணத்தை கடத்திய இளைஞரை எழும்பூர் ஆர்.பி.எஃப் போலீஸார் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.