க்ரைம்

சென்னை | மெத்தம்பெட்டமைன் கடத்தல் வழக்கில் மேலும் 4 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொத்தவால்சாவடி போலீஸார் கடந்த 13-ம் தேதி மின்ட் தெருவிலுள்ள துணிக்கடை அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர் வைத்திருந்த கைபை சோதனையிட்டனர்.

அதில், மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், போதைப் பொருள் வைத்திருந்த சவுகார்பேட்டையை சேர்ந்த மணிஷ்குமார் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின்பேரில் பூக்கடை பகுதியைச் சேர்ந்த ரோஹித்குமாரை (25) கடந்த 16-ம் தேதி கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு: இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த கொத்தவால்சாவடி தர்ஷன் (25), ஏழுகிணறு அமீத் அஃபாத் (26), திருவல்லிக்கேணி முகமது சித்திக் (35), ராமநாதபுரம் மாவட்டம் செல்வகுமார் என்ற அப்துல்லா (39) ஆகிய மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர், 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT