க்ரைம்

பரனூர் சுங்​கச்​சாவடி​யில் லாரி கடத்தல்: 15 கிலோமீட்டர் தூரத்துக்கு விரட்டி சென்று பிடித்த போலீஸார்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் லாரி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் 15 கிமீ தூரத்துக்கு விரட்டிச் சென்று பிடித்தனர். கேளம்பாக்கம் பகுதியில் அன்பு என்பவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரது ஓட்டுநர் நேற்று காலை மேல்மருவத்தூர் பகுதி கல்குவாரியில் இருந்து லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் வண்டி வந்தபோது, பாஸ்ட் ட்ராக்கில் போதிய பணம் இல்லாததால் சுங்கச்சாவடியை கடக்க முடியாமல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து லாரியை ஓரம் கட்டிய ஓட்டுநர் உடனடியாக இதுகுறித்து, உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாஸ்ட் ட்ராக்கில் ரீசார்ஜ் செய்வதற்காக காத்திருந்தார்.

அந்த சமயத்தை பயன்படுத்திய சுங்கச்சாவடி அருகே இருந்த மர்ம நபர் திடீரென லாரியை எடுத்து, சென்னையை நோக்கி அதி விரைவாக இயக்கத் தொடங்கினார். இதனை சற்றும் எதிர்பாராத லாரி ஓட்டுநர் உடனடியாக இதுகுறித்து, அருகில் இருந்த காவலரிடம் தெரிவித்தார்.

ரோந்து பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக இது தொடர்பாக அருகில் இருந்த காவலர்களுக்கு தெரிவித்தனர். மகேந்திரா சிட்டி சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் இருந்த போலீஸார் பேரிகாட்டுகள் ஆகியவற்றை அமைத்து, லாரியை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும் லாரியை தடுத்து நிறுத்த முடியவில்லை.

இருசக்கர வாகனத்தில் ஒருபுறம் போலீஸார் லாரியை வேகமாக பின் தொடர்ந்தும் சென்று கொண்டிருந்தனர். அப்போது லாவகமாக போலீஸார் ஒருவர் லாரியில் ஏறி, ஓட்டுநரை லாரியிலிருந்து கீழே இறக்க முயற்சி செய்தார். மறைமலை நகர் ரயில் நிலையம் அருகே லாரியை, மர்ம நபர் தடுப்பு மீது மோதி நிறுத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற போது போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

திரைப்பட பாணியில்... போலீஸார் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்துக்கு துரத்திச் சென்று சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாறுமாறாக சென்ற லாரி பொதுமக்களை, இடித்து தள்ளும் விதத்தில் ஓடியது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. லாரி தடுப்பின் மீது மோதி நின்ற போது, காவல்துறையுடன் இணைந்து பொதுமக்களும் லாரியில் இருந்த ஓட்டுநரை பிடிக்க உதவி செய்தனர்.

ஒரு கட்டத்தில் பொதுமக்களும் பின்தொடர்ந்து சென்று போலீஸாருடன் சேர்ந்து லாரியை மடக்கி பிடித்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் சிறப்பு ஆய்வாளர் பாலமுருகன் என்பவர் லாரியை பிடித்து தொங்கியபடி 5 கிமீ தூரத்துக்கு பயணம் செய்துள்ளார்.

போலீஸார் நடத்திய விசாரணையில், அவர், பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பது தெரியவந்தது சம்பந்தப்பட்ட நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசி வருவதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

SCROLL FOR NEXT